சாக்லேட்

''என் காலைத் தொட்டுக் கும்புடு... அப்பதான் நான் ஒப்புக்கிடுவேன்.''

''நோ... நான்தான் தேங்க்ஸ்னு சொல்றேன் இல்லே.''

''உன் டேங்ஸைத் தூக்கி ஒடப்புல போடு. நீ ஆசைப்பட்டியேன்னு உங்க டாடிகிட்ட சொல்லி, மம்மிகிட்ட கெஞ்சி, அந்த சாக்லேட்டை உனக்கு வாங்கிக் கொடுத்தேன் பாரு. அதுக்கு...''

''ஓ.கே! தேங்க்ஸ்... தேங்க்ஸ்... தேங்க்ஸ்! மூணு தேங்க்ஸ் போதுமா?''

''அதுக்குப் பதிலா ஒரே ஒரு தடவை என் காலைத் தொட்டுக் கும்புடு, போதும்!''

பாட்டி (வயசு 68) அடம்பிடிக்க, கீர்த்திக் குட்டி அரைக்கால்வாசி மனதுடன் 'ம்க்கும்' எனச் சொல்லியபடி, கொஞ்சம் வீக்கமாயிருந்த இடக் காலை விட்டுவிட்டு, வலக் காலை மட்டும் தொட்டு வணங்க, பாட்டி வாரி அணைத்துக்கொண்டாள்.

அந்நேரம் பார்த்து ஓடி வந்த அந்த சாக்லேட், பாட்டியின் காலருகே மூச்சா போய்விட ''அடி செருப்பால, நாயே'' எனப் பாட்டி விரட்ட, முன்னங்கால்களை மடக்கிக் கீழே விழுந்த சாக்லேட் திரும்பிப் பார்த்துத் திகைக்க, கீர்த்திக் குட்டி ஓடி வந்து அவளைத் தூக்கிக்கொண்டு பால்கனிக்கு ஓடினாள்.

இருவருக்கும் 9 வருடம் 4 மாதம் வயது வித்தியாசம்.

''தனி வீடுன்னா பரவாயில்லை. ஃப்ளாட்ல எல்லாம் நம்மால சமாளிக்க முடியாது'' - இது அப்பா.


''உன்னையும் சின்னு(ஒரு வயசுப் பையன்)வையும் சமாளிக்கிறதே எனக்குப் பெரும்பாடு. இதுல நாய்க் குட்டி வேறயா? உங்க பாட்டியைப் போய்க் கேளு. அது பண்ற அசிங்கத்தை வாரிப் பெருக்கிச் சுத்தம் பண்றதுக்கு அவங்க யெஸ்னா எனக்கு ஓ.கே!'' - இது அம்மா (Consciousness Level-ல் மாமியாரை மாட்டிவிட்ட பெருமை) ''ப்ளீஸ் பாட்டி! பாட்டி... பாட்டி...'' 108 முறை சொல்லி, ஹோம் வொர்க் செய்துகாட்டி, அலமாரியில் இருந்து பாட்டிக்குத் தலைவலித் தைலம் மற்றும் ஈறு சீப்பு எடுத்துக் கொடுத்து, அப்பாவின் ஃப்ரெண்டைப் பிடித்து, அவரும் பாட்டியிடம், 'ஒரு ஆறு மாசக் குட்டின்னா பெருசா தொந்தரவு இருக்காதும்மா. இது இது இப்படின்னு பழக்கிட்டம்னா, அங்கேயே சாப்பிடும், அங்கேயே போகும். வீட்டை அசிங்கப் படுத்தாது' என சர்டிஃபிகேட் கொடுக்கவைத்து, ஒருவழியாக அந்தக் குட்டியை எடுத்து வந்து 'சாக்லேட்' என நாமகரணம் சூட்டிய பிறகு, நடந்த நன்றி நவிலல் புராணம் மேற்சொன்னது. சாக்லேட்டின் புது உலகம் அதிசுவாரஸ்யம் அவளுக்கு! தன் குட்டியூண்டு வாலை ஆட்டிக்கொண்டு வீடு முழுக்க ஓடித் திரியும் அதை இழுத்து வந்து, தொலைக்காட்சிப் பெட்டி முன்பு நிறுத்துவாள் கீர்த்தி.

சிட் டவுன் சொல்லியும் உட்காராத அதனிடம், விளம்பரத்தில் அதைப் போலவே இருக்கும் ஒரு குட்டியைக் காட்டுவாள். தலையை ஒரு சிலுப்பு சிலுப்பிவிட்டு ஓடிவிடுவாள்... அந்த ரோமாபுரி ராணி! அவள் செல்லும் இடமெல்லாம் துப்புரவுத் தொழிலாளியாகப் பின்தொடர்வாள் பாட்டி. சுவர் ஓரமாகத் துடைப்பத்தைச் சாய்த்துவிட்டு, தானும் சாய்ந்துகொண்டு, இளைப்படங்காமல் போராடுவாள். ஏற்கெனவே இருந்த மூச்சுத் திணறல், இப்போது திணறலுக்கு நடுவே மூச்சுவிடுவதாக அவளைச் சிரமப்படுத்திக்கொண்டு இருந்தது.

கீர்த்துவுக்குச் சர்வமும் சாக்லேட்டுதான். சாக்லேட்டின் அகன்று விரிந்த கண்களுக்கு கீர்த்துவின் ஆங்கிலக் கட்டளைகள் புரியும்படி பழக்கப்படுத்திவிட்டாள். இருவரும் ஜோடி சேர்ந்து அடிக்கும் கொட்டம் சொல்லி மாளாது. அதே நேரம் கீர்த்துவைப் பாடம் படிக்கவைக்கவோ, சொன்ன பேச்சைக் கேட்கவோ சாக்லேட் துருப்புச் சீட்டாகப் பயன்பட் டாள். அடிக்கடி, பாட்டி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். சற்று ஒதுங்கி இருந்த அப்பாகூட உள்ளே நுழையும்போது 'சாக்லேட்' எனக் குரல் கொடுக்கத் தொடங்கினார்.

ஆஸ்பத்திரியில் இருந்த பாட்டி எப்போதாவது வீட்டுக்கு வர ஆரம்பித்தாள். பலவிதப் பரிசோதனைகளின் முடிவைச் சோதித்த டாக்டர், அப்பாவிடம் 'வீட்ல ஏதாவது 'பெட்' வெச்சிருக்கீங்களா?' - கேட்டதில் இருந்து வீட்டில் ஒரு சூனியம் ஒண்டிக் குடித்தனம் நடத்தியது. டாக்டர் தீர்மானமாகச் சொன்னார், 'பாட்டியின் உடல்நிலை தொடர்ந்து மோசமாவதால்...' கீர்த்தி அதிர்ந்துபோனாள்!

'சாக்லேட்டை எப்படிப் பிரிவது?' - நினைத்த மாத்திரத்திலேயே கண்கள் பொங்கின அவளுக்கு. பாட்டியின் அறைக்குள் சாக்லேட் நுழைந்துவிடாமல் பார்த்துக்கொண்டாள். முடிந்த வரை பால்கனியிலேயே வைத்துக்கொண்டாள். தப்பித் தவறி ஹாலுக்குள் வந்து தலை சிலுப்பிவிட்டுச் சென்றால், பின்னாடியே துடைப்பத்துடன் செல்லத் துவங்கினாள் கீர்த்து.

இதை எல்லாம் படுத்த படுக்கையான பாட்டி கவனிக்காமல் இல்லை.

திடீரென ஒருநாள் அப்பா கீர்த்துவை அழைத்து, ஒபாமா வீட்டு நாய்க் குட்டியை வலையில் காண்பித்தார். முழுக்கச் சவரம் செய்தது போல் இருந்த அதை கீர்த்துவுக்குப் பிடிக்கவே இல்லை.

''சரி, இது எப்படியிருக்கு?'' குட்டியூண்டாக பாக்கெட்டுக்குள் வைத்துக்கொள்ளும்படி இருந்த அதைப் பார்த்ததும், கீர்த்துவுக்கு 'குஷி' பிடித்துக்கொண்டது.

''இது உனக்கு வேணுமா?''

அப்பாவின் கரிசனங்களுக்குப் பின்னால், ஒரு சூழ்ச்சியும் அதற்கும் பின்னால் பாட்டியின் உடல்நிலை குறித்த நியாயமும் இருந்தது. தற்காலிகமாக சாக்லேட் அப்பாவின் நண்பர் வீட்டில் இருக்குமாம். எப்போது வேண்டுமானாலும் போய்ப் பார்க்கலாமாம். பாட்டிக்கு உடல்நிலை சரியானதும், சாக்லேட்டுடன் அந்த பாக்கெட் நாய்க் குட்டியும் சேர்ந்து, ரெண்டாக வீட்டுக்கு வந்துவிடுமாம்.

கீர்த்துவின் நெற்றியில் ஈரத் துணியை மாற்றி மாற்றிப் போட்டாள் அம்மா. ஒரு வாரத்துக்கான லீவு லெட்டரை ஸ்கூலில் அப்பா கொடுத்துவிட்டு வந்தார்.

கீர்த்துவை ஒட்டி உட்கார்ந்துகொண்டு, அவளையே பரிதாபமாகப் (கண்களில் எப்போதும் ஈரம்) பார்த்துக்கொண்டு இருக்கும் சாக்லேட்டை பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அப்பா உள்ளே நுழையும்போது அவரின் காலைச் சுற்றியும், அம்மாவின் புடவையை இழுத்துவிட்டுத் தன்னுடைய தட்டருகே போய் உட்கார்ந்துகொள்வதும், சின்னுவின் விளையாட்டுப் பொருள்களை இழுத்துக்கொண்டு ஓடுவதும், ஞாபகம் வரும்போதெல்லாம் பூட்டியிருக்கும் பாட்டியின் அறையின் கதவு இடுக்கில் தன் சப்பை முகத்தை வைத்தபடி உள்ளே பார்க்க முயல்வதும், அவளுக்கென அமைத்துக்கொண்ட குறுகிய உறவு வளையத்துக்குள் வளைய வளைய வந்தாள். செய்வதறியாமல் ஓரிரு வாரம் சாக்லேட்டை அனுப்பிவைக்கும் பிரச்னையை ஆறப்போட்டார்கள்.

கீர்த்து சகஜ நிலைக்கு வந்தாள். ஆனால், பாட்டியின் நிலை வருத்தமாகத்தான் இருந்தது.

நாள் குறித்துவிட்டார்கள்! வரும் திங்கட்கிழமை கீர்த்து ஸ்கூலுக்குச் சென்ற பிறகு, சாக்லேட்டை பிரதாப்சிங் வீட்டில் விட்டுவிடுவது.

தெரியும்போது, கீர்த்துவுக்கு மறுபடி ஜுரம் வரும். இரண்டு, மூன்று நாட்களில் சரியாகிவிடும். சமாளித்துக்கொள்ளலாம். வேறு வழியில்லை!

சனிக்கிழமை இரவில் இருந்தே சாக்லேட் எது கொடுத்தாலும் சாப்பிடவில்லை. தட்டில்வைத்துத் தள்ளிவிடும் அம்மாகூட, கையில் எடுத்து வாயருகே கொண்டுசென்றாள். ம்ஹ¨ம்... சோகமாகப் படுத்துக்கொண்டது. ஞாயிறு மதியம் கீர்த்துவும் 'எனக்கு வயிறு வலிக்குதும்மா' எனச் சாப்பிட மறுத்துவிட்டாள். அப்பாவும் அம்மாவும் குசுகுசுவெனப் பேசிக்கொண்டார்கள்.

''கீர்த்து எங்கே?''

''சாக்லேட்டைக் கூட்டிக்கிட்டு பிளே கிரவுண்ட் போயிருக்கா.''

''அவளுக்குத் தெரியாதில்லே..?''

''தெரியாது. ஆனா, அந்த சாக்லேட்டுக்குத் தெரியும் போலிருக்கு.''

பால்கனியில் நின்றபடி கீர்த்துவின் தலை தெரிகிறதா எனப் பார்த்தபடி அப்பா, பிரதாப் சிங்கிடம் பேசிக்கொண்டு இருந்தார். 'ஆமா, பத்து, பத்தரை மணிக்கு வந்துடு.' யாரோ காலிங்பெல்லை அடிக்க, அவர் உள்ளே சென்றார். பால்கனி கதவுக்குப் பின்னால் சாக்லேட்டை மடியில் படுக்கவைத்தபடி கீர்த்து விசும்ப ஆரம்பித்தாள்.

''ரெண்டு பேரும் ஒண்ணுமே சாப்பிடாம தூங்கிட் டாங்க'' - அம்மா, அப்பாவிடம் சொல்லிக்கொண்டு இருக்க, கீர்த்துவின் காதுகள் நனைந்து, தலையணையும் நனைந்துகொண்டு இருந்தது. திடுக்கென எழுந்தவளிடம் அம்மா, ''எங்க கீர்த்து போறே?''

''லூ''. பாத்ரூம் கதவை மூடிவிட்டு, பால்கனிக் கதவை அதே போலத் திறந்து பார்த்தாள். சாக்லேட் நிமிர்ந்து அவளைப் பார்த்தபடி வாலை மட்டும் ஆட்டியது. கண் களில் ஈரம்! விறுவிறுவென வந்த கீர்த்தி போர்வைக்குள் தன்னை ஒளித்துக்கொண்டாள். அப்படியே தூங்கியும் போனாள். இரவெல்லாம் ஈனஸ்வரத்தில் சாக்லேட் முனகிக்கொண்டு இருந்தது பாட்டிக்கும் தெளிவாகக் கேட்டது.

சின்னுவின் இடைவிடாத அழுகை, கீர்த்துவை எழுப்பிவிட்டது. கண்களைக் கசக்கியபடி எழுந்தவளை, ஹாலில் கேட்ட அழுகைக் குரல் அதிர்ச்சியடையச் செய்தது. கிடுகிடுவென ஓடியவள் பால்கனிக் கதவைத் திறக்க, சாக்லேட் ஓடி பாட்டியின் அறைக்குள் சென்றது. அப்பாவும் - அம்மாவும் அழுதுகொண்டு இருந்தார்கள். பாட்டியின் முகம் அமைதியாக... மூச்சுவிடுவதற்குச் சிரமப்படாமல்... சாக்லேட் கட்டில் மீது முன்னங்கால்களை வைத்தபடி பாட்டியின் முகத்தருகே செல்ல முயற்சித்தது. திருதிருவென அம்மாவையும் அப்பாவையும் பார்த்த கீர்த்து, சட்டெனக் குரல் வராமல் அழத் தொடங்கினாள். அப்பா அவளை இழுத்துத் தன் மடியில் சாய்த்துக் கொண்டார்.

அம்மா, சின்னுவைத் தூக்கி வர, அடுத்த அறைக்குச் சென்றாள்.

அப்பா, கீர்த்துவைச் சமாதானப்படுத்தி ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு கைபேசியில் 'உடனே வாயேன்' என யாரையோ அழைத்தபடி ஹாலுக்குப் போனார்.

சாக்லேட் பரிதாபமாக கீர்த்துவைப் பார்த்தது. கீர்த்து பாட்டியின் முகத்தைப் பார்த்தபடி அவளின் காலடியில் வந்து நின்று, அழுகையை அடக்கமாட்டாமல்... வீங்கியிருந்த கால்களையும் தொட்டு, ஈரம் வடியும் தன் கண்களில் வைத்துக்கொண்டாள்!

Comments

Popular posts from this blog

மகள்..

முடிவு....

பாரதி.....