a cute story
ராட்டினக் கடைகளையும் பலூன் வியாபாரிகளையும் தொலைத்துவிட்டு, முடிந்துபோன திருவிழாவைப் போல தன் வீடு அமைதியில் ஆழ்ந்துபோனதில் சீனிவாசனுக்கு ஆற்ற முடியாத வருத்தம்.
உள்ளே உஷா இருமுகிற சத்தம் கேட்டது. எட்டிப் பார்த்தார். வாசலில் சுருண்டுகிடந்த டைகர் ஓடி வந்து, அதன் பங்குக்கு அக்கறையாக இருப்பது போல வாலாட்டிவிட்டுப் போனது. இருமல் தாங்காமல் உஷாவின் உடல் குலுங்கக் குலுங்க, சீனிவாசனுக்குச் செத்துவிடலாம் போலிருந்தது.
உஷாவின் தலைமாட்டில் உட்கார்ந்த உடனேயே பொத்துக்கொண்டு வந்துவிட்டது, அதுவரை தாக்குப்பிடித்து வைத்திருந்த கண்ணீர்.
''என்னடா உச்சு... நெஞ்சுக்குத் திணறடியா இருக்கா? சிரப் எடுத் துட்டு வரவா?''
உஷா, சீனிவாசனின் கண்களையே பார்த்துக்கொண்டு இருந்தாள், பதில் ஏதும் சொல்லாமல்.
''காலையிலேர்ந்து ரெண்டு தடவை சிரப் சாப்பிட்டும், இருமல் கொஞ்சமும் குறையலையே..? டாக்டர்கிட்ட கேட்கவா?''
உஷாவின் முகத்தை நெருங்கிக் கேட்டார் சீனிவாசன். உஷா லேசாகச் சிரிக்க மெனக்கெட்டாள். சீனிவாசனின் விரலை அவளுடைய விரலால் மெள்ள வருடினாள். திடமில்லாத தொனியில், 'சீனு...' எனக் கொஞ்ச முயற்சித்தாள். சீனிவாசன் மனசு சட்டென பழைய நினைவுகளுக்குள் புகுந்தது.
''மிஸ்டர் சீனிவாசன்... எங்கூட லேடீஸ் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் வர முடியுமா?''
''என் உச்சுக்குட்டிக்கு லேடீஸ் போலீஸ் ஸ்டேஷனைப் பார்க்கணும்னு ஆசையாக்கும்! எங்கிட்ட சொல்லி இருந்தா, எஸ்.பி. ஆபீஸையே சுத்திக் காட்டியிருப்பேனே..!''
''சீனுங்கிற ராஸ்கல் தன் ரெண்டு மாச கர்ப்பிணியைச் சரியா கவனிக்காம எந்நேரமும் டியூட்டி டியூட்டின்னே அலைஞ்சுட்டு இருக்கான். அவனை உள்ளே தள்ளணும்னா லேடீஸ் போலீஸ் ஸ்டேஷன்லதானே புகார் கொடுக்கணும்?''
''ஸாரிடா உச்சு... நீ கம்ப்ளைன்ட் கொடுத்தா, அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, உடனே உனக்கு விவாகரத்தே வாங்கிக் கொடுத்துடுவா!''
''அந்தளவுக்குத் தடாலடியானவங்களா?''
''போடி லூஸூ! அந்தளவுக்கு என் மேல காதல் பைத்தியம் புடிச்சு அலையிறவ. ஒரு தடவை அவளையும் என்னையும் சம்பந்தப்படுத்தி, பேப்பர்ல நியூஸே வந்துச்சு தெரியுமா? செய்தி போட்ட நிருபர் மேல கஞ்சா கேஸ் போடுவேன்னு மிரட்டினப்பதான், 'செய்தி போடச் சொன்னதே அந்த புவனேஸ்வரிதான் சார்'னு சொன்னான். கல்யாணத்தன்னிக்கு கிஃப்டோட வந்தவ உன்னை எப்படியெல்லாம் சபிச்சுட்டுப் போனாள்னு எனக் குத்தானே தெரியும்!''
''படவா, நீ பயங்கரமான ஆளுடா!'' & சீனுவின் நெஞ்சோடு சரிந்து விளையாடினாள் உஷா. காக்கி உடை அவளுடைய கவனிப்பில் வெட்கப்பட்டு காலரை உள்ளே சுருட்டிக்கொண்டது.
சீனிவாசனுக்கு உலகமே தன் உள்ளங்கையில் வந்து உட்கார்ந்துவிட்டதைப் போல புரிபடாத பூரிப்பு. ரவுடிகளையும் பிக்பாக்கெட்காரர்களையும் மட்டுமே பார்த்துப் பார்த்து வேறு மாதிரி இயங்கிக்கொண்டு இருந்த அவருடைய உலகம், திடீரென பரவசப் பாதையில் பயணிக்கத் தொடங்கியது. பார்க்கிற திசைகளில் எல்லாம் பூக்கள் மலர்ந்து கிடந்தன.
உஷாவைப் பிரசவத்துக்குச் சேர்த்தபோதுதான், வாழ்க்கையிலேயே முதல்முறையாக சீனிவாசனுக்குக் கண்ணீர் வந்தது. அந்தக் கண்ணீரும் அடுத்த சில நிமிடங்களிலேயே பேரானந்தக் கண்ணீராக மாறிப் போனது. ரெட்டைப் பெண் குழந்தைகள். சீனிவாசனுக்குத் தலைகால் புரியவில்லை. அப்போதே உஷாவைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆட்டம் போட வேண்டும் போலிருந்தது.
''உங்க மடியில கொஞ்ச நேரம் தலை வெச்சுப் படுத்துக்கவா?''
உஷாவின் வார்த்தையில் நினைவு திரும்பி, நொறுங்கிப் போனார் சீனிவாசன்.
உஷாவின் தலையை மெள்ள உயர்த்தித் தன் மடியில் கிடத்திக்கொண்டார். சில நிமிஷங்கள் சீனிவாசனையே உற்றுப் பார்த்துக்கொண்டு இருந்த உஷா, அப்படியே உறங்கிப் போனாள். இருமல் சற்றுக் குறைந்திருந்தது. மூச்சு மட்டும் மிரட்டும் சத்தத்தில் வந்து போய்க்கொண்டு இருந்தது.
டைகர் பசியில் கத்தத் தொடங்கிவிட்டது. உஷாவை மெதுவாகப் படுக்கையில் கிடத்திவிட்டு, டைகருக்கு பிரெட் எடுக்க கிச்சனுக்குள் நுழைந்தார் சீனிவாசன்.
இப்போதைக்கு டைகர்தான் ஒரே நண்பன். வாசலில் ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டு உட்கார்ந்து, டைகருடன் விளையாடிக்கொண்டு இருப்பார் சீனிவாசன்.
வெளியே போய்விட்டு வீட்டுக்குள் வருகையில், இரண்டு செல்ல மகள்களும் தன் கழுத்தைக் கட்டிக்கொண்டு தொங்கிய சந்தோஷங்கள் எல்லாம் திடீரெனத் தொலைந்து போனபோது, உள்ளங்கையில் உட்கார்ந்திருந்த உலகம் சட்டென உருவப்பட்டது போலிருந்தது சீனிவாசனுக்கு.
உஷாவுக்கு உடல்நிலை சரி இல்லாமல் போனபோது, சீனிவாசன் பெரிதாகப் பயப்படவில்லை. தான் உயிரோடு இருக்கும்வரை உஷாவின் உயிரை எந்த எமனாலும் பறித்துவிட முடியாது என்கிற அசாத்திய நம்பிக்கை சீனிவாசனுக்கு. ஆனால், உஷா வுக்கு வந்திருப்பது புற்றுநோய் எனத் தெரியவந்தபோது, சீனிவாசனின் தைரியம் பொசுங்கிப் போய்விட்டது. மகள்களை எப்படி மணம் முடித்து வைப்பது என்கிற கவலை மனம் முழுக்க அப்பிக்கொண்டது. இன்ஜினீயரிங் முடித்த கையோடு இரு மகள்களுக்கும் வெளிநாட்டு வரன்கள் வர, சாஸ்திர சம்பிரதாயம் எதுவும் பார்க்காமல் அந்தச் சம்பந்தங்களை அவசர கதியில் முடித்துவிடத் தோன்றியது.
இரு மகள்களையும் மாலையும் கழுத்துமாகப் புகுந்தவீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு, வீட்டுக்குள் வந்து விழுந்தபோதுதான் வெறுமை எப்படிப்பட்டது என்பதை சீனிவாசனால் உணர முடிந்தது.
இதற்கெல்லாம் ஒரே ஆறுதலாக அவருக்கு அமைந்தது டைகர் மட்டும்தான். கருகரு முடியுடன் டைகர் வீடு முழுக்க வளைய வருவதைப் பார்க்கும்போதே மனசுக்குள் உற்சாகம் துளிர்விடத் தொடங்கிவிடும். வெளியே போய்விட்டு வீட்டுக்குள் நுழைகையில் கால்களால் கவ்வி, 'எனக்கு என்ன வாங்கிட்டு வந்தே?' என ஆர்வத்தோடு லொள் குரலில் கேட்கிற குழந்தை அது. சீனிவாசன் வீட்டில் இல்லாத சமயங்களில் உஷா வாந்தி எடுத்தால், அதைச் சுத்தப்படுத்துகிற வேலையையும் டைகர்தான் செய்யும். ஆரம்பத்தில் அதைப் பார்க்கையில், சீனிவாசனுக்கு பயம் வந்துவிட்டது. உடனே, டாக்டருக்கு போன் செய்து, டைகருக்கு ஏதும் ஆகிவிடுமோ எனக் கேட்டார். 'ஒரு பயமும் இல்லை. வாந்தி மூலமாகப் புற்றுநோய் பரவ வாய்ப்பில்லை' என்று டாக்டர் சொன்னதற்குப் பிறகுதான் சீனிவாசனுக்கு நிம்மதியே வந்தது.
இன்றென்னவோ தைகருடன் விளையாடத் தோன்றவில்லை. உஷாவின் நிலையை டாக்டரிடம் சொல்லி, என்ன ஏதென்று கேட்டுவிட்டு வரலாம் எனத் தோன்றியது. அடுத்த யோசனையே இல்லாமல், உடனே ஆட்டோ பிடித்துக் கிளம்பிவிட்டார் சீனிவாசன்.
ஐம்பது வயதைக் கடந்துவிட்ட உடம்பு... வெயில் தாங்காமல் வியர்வையாக அழுது தீர்த்தது. ஏதாவது குளிர்ச்சியாகச் சாப்பிடலாம் போலிருந்தது. டாக்டர் ரத்னவேலு சொன்ன தைரியமெல்லாம் சீனிவாசனுக்கு நம்பிக்கையைத் தரவில்லை. டாக்டர் கொடுத்த மாத்திரை மருந்துகளைப் பத்திரமாக எடுத்துக்கொண்டவர், அடுத்த வாரம் உஷாவை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வருவதாகச் சொல்லிவிட்டு நிமிர்ந்தபோது, செல்போனில் எஸ்.எம்.எஸ். வந்ததற்கான மெல்லிய இசை. டாக்டரிடம் விடைபெற்று வெளியே வந்து, அந்த எஸ்.எம்.எஸ்&ஸை வாசித்தபோது, சுருக்கென்றிருந்தது... 'ஸாரி சீனு! என்னை மன்னிச்சிடு!'
உஷா ஏன் இப்படியரு செய்தி அனுப்பியிருக்கிறாள்?
சட்டென எழுந்த பதற்றத்தில், முழுக்க நனைந்துபோனது உடம்பு. உஷாவுக்கு போன் செய்தால், அது தெளிவாக ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. பேரம் பேசாமல் ஒரு ஆட்டோவை மறித்து ஏறி, வீடு நோக்கி விரைந்தார் சீனிவாசன். அவருடைய சுவாசம் தாறுமாறாக எகிறியது.
ஆட்டோவை விட்டு இறங்கிய கையோடு பரபரவென வீட்டுக்குள் ஓடினார். மெல்லிய நடுக்கத்தோடு உஷாவின் அறைக்குள் நுழைந்தார். அவருடைய கால்கள் அவரையும் அறியாமல் பின்னிக்கொண்டு, அவர் விருப்பத்துக்கேற்ப இயங்க மறுத்தன. உஷாவின் தலைமாட்டில் ஒரு காகிதம் படபடத்துக்கொண்டு இருந்தது. நெஞ்சு பதைபதைக்க, அதை எடுத்துப் பார்த்ததுமே சீனிவாசனுக்கு விஷயம் புரிந்துவிட்டது. உஷா விஷம் குடித்துவிட்டாள்.
'ஐயோ..!' சீனிவாசனின் அடிவயிற்றில் இருந்து கிளம்பிய அந்தப் பரிதவிப்பான குரல் கேட்டு, அக்கம்பக்கத்துவாசிகள் ஓடி வந்தார்கள். உஷா ரத்த ரத்தமாக வாந்தியெடுக்க, உதவிக்கு வந்தவர்கள் 'எங்கே தனக்கும் அந்த வியாதி தொற்றிக்கொள்ளுமோ' எனப் பயந்து, விலகி ஒதுங்கினார்கள். யாரோ ஆம்புலன்ஸூக்கு போன் செய்ய, யாருமற்ற இருட்டுக்குள் நிற்பதுபோல் பிரமையில் ஆழ்ந்திருந்தார் சீனிவாசன்.
''முடிஞ்சுடுச்சு ஸார்..!'' & வருத்தம் தோய்ந்த குரலில், உதடு பிதுக்கிச் சொன்னார் ரத்னவேலு டாக்டர்.
''தைரியமா இருங்க சீனிவாசன்! அவங்களாலயும் எத்தனை நாளைக்குதான் வலி, வேதனையோடு வாழ முடியும்? அவங்க படற வேதனையைப் பார்த்து நீங்க கஷ்டப்படறதையும் அவங்களால பொறுத்துக்க முடியாம இருந்திருக்கும். வேற வழி தெரியலை. அவங்களை அவங்களே கருணைக் கொலை பண்ணிக்கிட்டாங்கன்னுதான் சொல்லணும்!''
உஷா எழுதிய கடிதத்தை சட்டைப் பையிலிருந்து எடுத்து, மீண்டும் பிரித்து, முழுதாகப் படித்துப் பார்க்கத் தோன்றியது சீனிவாசனுக்கு.
'மன்னிச்சுக்கங்க சீனு! இனியும் உங்களைக் கஷ்டப்படுத்த விரும்பலை. அதான், விஷம் குடிச்சுட்டேன். நான் போறேன். தைரியமா இருங்க. நம்ம பொண்ணுங்களுக்குத் தகவல் சொல்லிடுங்க. அப்புறம்... நம்மப்l டைகர்யை பத்திரமா பார்த்துக்கோங்க...'
'ஐயோ..!' சீனிவாசனின் அடுத்த அலறல், ஆஸ்பத்திரி முழுக்க எதிரொலித்தது.
''தெய்வமே! ஏதும் நடந்திருக்கக் கூடாது. என்னை நிராதரவா விட்டுடாதே!'' எனப் பதறியபடியே வீட்டை நோக்கி ஓடினார். வீட்டைச் சுத்தம் செய்கிறேன் என்கிற பெயரில், உஷா எடுத்த வாந்தியை டைகர் தின்றிருக்குமோ என நினைக்கும்போதே சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது சீனிவாசனுக்கு.
'டோனி, வேண்டாம் டைகர்! உஷா எடுத்த வாந்தியில் விஷம் கலந்திருக்கு. வழக்கம் போல் நீ அதைச் சுத்தம் செய்யக் கிளம்பி விடாதே, டைகர்!'
Heart touchin story.... Cant control my tears....
ReplyDelete